Wednesday, January 16, 2019

இன்னிசை அளபெடை - 1

"இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்"

எவ்வளவு உண்மையான வரிகள். மனித மனதின் சந்தோசமான தருணத்திற்கும், துக்கமான மனநிலைக்கும் பாடல் ஒன்றே வடிகாலாக இருக்கிறது. மனதின் அடியாழம் வரை சென்று நிறையக் கூடிய வலிமை இசைக்கு மட்டும் தான் உண்டு. எத்தகைய மனக்கஷ்டத்திலும் ஒரு இனிமையான பாடலை கேட்டுப் பாருங்கள், சலனப்படும் மனதை அமைதிப்படுத்தி சற்று தெளிவு படுத்தும்.

அந்த வகையில் என் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் பெரும்பான்மையான விஷயங்களில் இசை மட்டுமே உற்றத் தோழனாய்/தோழியாய்/அன்னையாய் துணை நிற்கிறது. இசைக்கு வலுவூட்டுவதாய் அமையும் பாடல் வரிகள் எப்பொழுதும் எனக்குப் பிடித்தமானது. அந்த மாதிரி அமைந்த எனக்குப் பிடித்த பாடல்களை, எவ்வகையில் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

காதலின் தவிப்பு

முதன்முதலாக காதல் அரும்பும் காதலர்கள் இருவரும், கண்களாலேயே காதலை பரிமாறிக்கொள்ளும் இன்பம்,  அருகிலிருந்தும் நெருங்க முடியாத தவிப்பு, தன் அளவில்லாத பெருங்காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் தருணம், காதலினால் பெருகும் தாபம் என காதல் பொங்கிப் பெருகும் இந்த பாடல் சுப்ரமணியபுரம் படத்திலிருந்து “கண்கள் இரண்டால்”

படம் : சுப்ரமணியபுரம்
பாடல் : கண்கள் இரண்டால்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : தீபா மரியம், பெல்லி ராஜ்

பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பொதுவான பாடல் அமைப்பில் அமைந்த இந்த பாடலில் எல்லா வரிகளும் காதலின் அழகுணர்வை வெளிப்படுத்தும். பல்லவி தொடங்குவதற்கு முன்பே ஆரம்பிக்கும் கீபோர்ட் நோட்சும் அதனுடன் சேர்ந்தபடி வரும் கோரஸும் மெல்லிய கடல் அலை போல் பாதம் தழுவி நம்மை உள் இழுத்துச் செல்கிறது. அதுபோல முதல் சரணத்திற்கு பிறகு வரும் கீபோர்ட் இசையும் அதனை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் தேன் குழைவு போல இருக்கும். பாடலின் இரண்டு சரணங்களுமே ஒரே ராகவரிசையில் அமைந்திருப்பதால்  இரண்டாம் முறை பல்லவிக்கு பிறகு வரும் கீபோர்ட் நோட்சும், அதை தொடர்ந்து வரும் கோரஸும் இதயம் வருடிச் செல்லும் இசை.

பேச எண்ணி சில நாள் எனத் தொடங்கும் வரிகள் பாடலின் அனுபல்லவியை(அனுபல்லவி என்பது சரணங்களுக்கு முன்பும் பின்பும் வரும் சிறு பல்லவிகள்) கேட்கும்பொழுதே பாடலில் கரைந்து போகலாம்.  

காதலின் தாபத்தில் இருக்கும் காதலன் இன்னும் நெருங்கியிருக்காத காதலியை நோக்கி தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி குறையும் பொழுது நமக்கு எப்பொழுது வாய்க்கும்  என்று ஏங்குகிறான், காதலின் அதே தாப நிலையில் இருக்கும் காதலியும்  உன் மடியில் சாய துடிக்கிறது மனது, இருந்தும் என் நாணம் தடுக்கிறது என அதே தாபம் தனக்கும் இருப்பதை காதலனுக்கு உணர்த்துகிறாள். பாடலில் இருப்பது போல அவர்களின் அந்த காதல் அதுவரை யாருக்கும் சொல்லாத, சொல்லிவிட முடியாத கதையாக இருக்கிறது.

இந்தப் பாடலின் இரண்டாவது சரணம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகளை கொண்டது. காதலியின் மனதில் இதுவரை யாரும் நுழைந்ததில்லை, அவள் மனதை யாரும் சலனப்படுத்தியதில்லை அதனை நீ தான் முதன் முதலில் தொட்டுத் திறக்கிறாய், நீ நுழைந்த பொழுதும் எனக்குத் தெரியவில்லை என்பதாக தொடங்கும் இரண்டாவது சரணம், கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் என்ற வரியும் அதனை தொடர்ந்து உடலோ உருவமோ அல்லாத ஒரு கடவுளைப் போல வந்து என்னுள் நீ கலந்துவிட்டாய் என காதலி தொடங்கும் வரிகளை, இனி உனை அன்றி எனக்கு வேற எந்த நினைவும் இல்லை, சாவிலும் கூட உன்னைத் தொடர்ந்து வர எனக்கு யாரும் தடை விதிக்க முடியாது  என்று காதலன் தன் நிலையை காதலிக்கு உணர்த்துகிறான்.

இரண்டாவது சரணத்தில், கலந்து விட்டாய், நுழைந்து விட்டாய் என்பது தான் புணர்ந்து கலந்திட்டாய் நுழைந்திட்டாய் என அமைந்திருக்கும். (இது என்ன புணர்ச்சி விதி என்று தெரிந்தவர்கள் கூறலாம்) . இந்த கலந்திட்டாயும் நுழைந்திட்டாயும் இந்த இருவரிகளுக்கு மேலும் அழகு சேர்ப்பவை, அதனாலேயே இந்த வரிகளை கேட்கும்பொழுது எனக்கும் கூட காதலின் உவகை மனதில் முறுவலிக்கும். 

ஆக, காதல் பெருகி வழியும் உணர்வை கண்களிலேயே பரிமாறிக்கொள்ளும் காதலனும் காதலியும் கண்களினாலேயே என்னைக் கட்டிப்போடுகிறாய் என பாடுகின்றனர். இதே போல அனுபல்லவி வரிகள் பல்லவி வரிகளை தொடர்தாற் போல பேச எண்னி சில நாள் அருகில் வரும் நான் பின்பு உன் பார்வை மட்டும் கூட போதும் என்று நகர்வேன்  என்று காதலன் காதலி இருவரும் பாடுகின்றனர். 

நண்பர்களே நீங்களும் இந்தப் பாடலை கேட்டு காதலில் திளைத்திருங்கள். இப்பாடலின் மற்றொரு முன்னோக்கு உங்களுக்கு இருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள், தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். மீண்டுமொரு முறை வேறொரு இசையில் தொலைந்துபோவோம்..

- இசைக்கின்ற பொழுது,

Dragon Queen